'மின் வெட்டு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி போராட்டங்களை நடத்தியதற்காக என் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கை சட்டரீதியாக தைரியமாக சந்திக்க தயாராக இருக்கிறேன்' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் எங்கும் நிலவும் கடும் மின்வெட்டினை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி இதுபோன்ற போராட்டங்களை நடத்துவதன் காரணமாக அ.இ.அ.தி.மு.க. செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எனவே கருணாநிதி மின் வெட்டு குறித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும். மின் வாரிய அலுவலகங்கள் முன் அ.இ.அ.தி.மு.க.தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு மின்சார வாரிய தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருவரை விட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கையில் இருந்து மக்கள் நலப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நான் வெளியிடும் அறிக்கைகள் எந்த அளவுக்கு நிலைகுலைய வைத்துள்ளன என்பது தற்போது தெளிவாகி உள்ளது.
மின்வெட்டு பிரச்சனை தமிழகத்தில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது போல் எனக்கு வாய்ப்பூட்டு போட்டு விட்டால் மின் வெட்டு பிரச்சனையை மூடி மறைத்து விடலாம் என்று நினைப்பது தெளிவாகி உள்ளது.
மக்கள் பிரச்சினைகள் பற்றி எதிர்க் கட்சி தலைவர் பேசக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு போடுவது எனக்குத் தெரிந்த வரையில் கேள்விப்படாத ஒன்று. எதிர்க் கட்சி தலைவர் மக்கள் பிரச்சனையான கடும் மின்வெட்டை சுட்டிக்காட்டிப் போராட்டம் நடத்துகிறார். அறிக்கை வெளியிடுகிறார் என்றால் அதைப் புரிந்து கொண்டு மின்வெட்டை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு நல்ல முதலமைச்சருக்கு அடையாளம்.
மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி போராட்டங்களை நடத்தியதற்காக என் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கை சட்டரீதியாக தைரியமாக சந்திக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.