சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதல் அமைச்சர் கருணாநிதி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் புயல்-மழை பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்திற்கு தேவையான வெள்ள நிவாரண உதவித் தொகையை மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சென்னையில் பெரிதும் பாதிப்புக்குள்ளான கோட்டூர்புரம், காந்தி மண்டபம், சைதாப்பேட்டை, கீழ்பாக்கம், பெரம்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கியதுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
கிண்டி காந்தி மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரொட்டிகளை வழங்கிய அவர், பாதிப்புக்குள்ளானோருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகள் பற்றிய விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் பெரம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, மாநில அரசுக்கு தேவையான நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், தமிழக சேத விவரங்கள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாவட்டங் களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செய்ய வேண்டிய நிவாரண உதவிகள் அனைத்தும் உடனடியாக செய்யப்படும்' என்றும், இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் தாம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சருடன் உணவு அமைச்சர் எ.வ.வேலு, மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்றனர்.