சென்னையில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் மாநகரமே ஸ்தம்பித்துப் போய் உள்ளது.
புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது. வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, மேடவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் என அனைத்துப் பகுதிகளிலும் இடுப்பளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.
தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் வருவதற்குக் கூட வழியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகரம்.
ஏரிகள், அணைகள் நிரம்பின!
சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் வெளியேறி அருகில் உள்ள பகுதிகளை வெள்ளக்காடாக்கியுள்ளது.
பல இடங்களில் கால்வாய்கள் உடைப்பு மற்றும் நிரம்பி உள்ளதால், வெள்ளநீர் சென்று வடிவதற்கு வாய்ப்பில்லாம்ல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. 3ஆவது நாளாக சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
அத்தியாவசியப் பொருட்களின் சேவையான பால், பத்திரிகை விநியோகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி காணப்படுவதால், மெதுவாகச் செல்கின்றன. மாநகரப் பேருந்துகள் ஓரளவுக்கு இயக்கப்படுகின்றன.
துரைசாமி சாலை, மேட்லி சாலை, நங்கநல்லூர் செல்லும் சாலை உள்ளிட்ட அனைத்து சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் புகுந்துள்ளதால இருசக்கர வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளதால, காய்கறிகள் வரத்தும், விற்பனையும் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி விட்டன.
சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் 3ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் அலுவலக்ங்களும் விடுமுறை அறிவித்துள்ளன.
இந்த மழை இன்றாவது நிற்காதா? வெள்ள நீர் வடியாதா? என்று சென்னைவாசிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.