மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய இந்த மோசமான சம்பவம் உளவுத்துறை செயல் இழந்து விட்டதையும், பாதுகாப்பு குறைபாட்டையும் எடுத்துக்காட்டுகிறது என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் தீவிரவாதிகள் ஏ.கே.47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மூலம் நடத்திய தாக்குதலில் 101 பேர் பலியான செய்தி அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். 900க்கும் மேற்பட்டவர்கள் இதில் காயம் அடைந்துள்ளனர்.
கடல் வழியாக படகுகளில் வந்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். தீவிரவாதிகள் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். கமாண்டோ படையினரே இதை ஒப்பு கொண்டுள்ளனர். இந்த மோசமான சம்பவம் உளவுத்துறை செயல் இழந்து விட்டதையும், பாதுகாப்பு குறைபாட்டையும், எடுத்துக்காட்டுகிறது. இந்திய பொருளாதாரத்தையே இந்த தீவிரவாத தாக்குதல் சீரழித்து விடும்.
தீவிரவாதத்தை ஒடுக்க தீவிரவாத தடுப்பு சட்டம் தேவை என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மத்திய அரசுக்கு யோசனை கூறி உள்ளார். மாநிலங்கள் தனியாக தீவிரவாத தடுப்பு சட்டம் இயற்றவும் மத்திய அரசு அதை தடுக்க தேவை இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
இப்போது உள்ள சட்டங்கள் தீவிரவாதத்தை தடுக்க போதுமானது அல்ல. நாட்டின் பாதுகாப்புக்காக 'பொடா' போன்ற சிறப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் மரணம் அடைந்த அனைவரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.