பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி இன்று அறிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று 33-வது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழகத்திலே தொடர்ந்து பெய்து வரும் பெருமழை குறித்து அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதுவரை அரசுக்கு வந்துள்ள செய்தியின்படி 55 வட்டங்கள், குறிப்பாக 1,380 வருவாய்க் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 94 பேர் மழை காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றும், 54 ஆயிரத்து 525 பேர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், 51 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும், 68 கால்நடைகள் இறந்துள்ளன என்றும், முழுவதுமாக 930 குடிசைகளும், பகுதியாக 1,905 குடிசைகளும் சேதமடைந்துள்ளதாக இதுவரை வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன என்று தலைமைச் செயலாளர் அமைச்சரவையில் விளக்கினார்.
மேலும் நிவாரணங்கள் வழங்குவதற்காக 242 மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அங்கே 48 ஆயிரத்து 805 பேர் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இருக்கிறார்கள் என்றும், இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 149 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சாலைகளும் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தலைமைச் செயலாளர் விளக்கினார்.
இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, பெருமழையிலே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
பகுதியாக பாதிக்கப்பட்ட, முழுவதுமாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் இந்த மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
வெள்ளப் பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப்பணிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டிணம், கடலூர் மாவட்டங்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும், திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும் செல்வது என்றும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.