வங்கக் கடலில் உருவாகி வலிமை பெற்ற 'நிஷா' புயல் இன்று காலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க கடலில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறியது. இந்த புயலுக்கு 'நிஷா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையாலும், வெள்ளத்தாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 121 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 3,089 குடிசைகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்த நிஷா புயல் சின்னம் வேதாரண்யத்துக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே நேற்று மாலை கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் புயல் சின்னம் தனது இடத்தில் இருந்து நகராமல் அதே இடத்தில் நிலை கொண்டு இருந்ததால் அது நேற்று கரையை கடக்கவில்லை.
நிஷா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை வேதாரண்யத்துக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது கடலோர மாவட்டங்களில் 65 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசும். அப்போது பலத்த மழைபெய்யும்.
புயல் கரையை கடக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய ஊர்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். கடல்அலை வழக்கத்தைவிட 2 மீட்டர் உயரத்திற்கு அதிகமாக வரும்.
அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும் சில இடங்களில் மிக கனத்தமழை பெய்யும். சில இடங்களில் மிக அதிக கன மழை பெய்யும்.
சென்னையில் மேக மூட்டமாக இருக்கும். ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்யவாய்ப்பு உள்ளது. தமிழக, புதுச்சேரி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் 7-வது நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 6-வது எண் கூண்டும், பாம்பன் துறைமுகத்தில் 5-ம் நம்பர் கூண்டும், சென்னை, எண்ணூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி, குளச்சல் ஆகிய துறைமுகங்களில் 3-ம் நம்பர் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.