பா.ம.க. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வன்னியர் சங்க மாநிலத் தலைவருமான காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த நடவடிக்கையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக அரசு புதன்கிழமை பிறப்பித்தது. இதன் நகல், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு தொலைநகல் மூலம் புதன்கிழமை மதியம் அனுப்பப்பட்டது. அதனுடைய நகல் சிறையில் இருக்கும் காடுவெட்டி குருவிடம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி நடந்த அரியலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய குருவின் பேச்சு, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும், வன்முறையை தூண்டும்விதமாகவும் இருப்பதாக கூறி, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான ஆணையை, கடந்த ஜுலை மாதம் 10ஆம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்.
அதற்கு முன்பாகவே, அ.தி.மு.க. பிரமுகர் குணசேகரன் என்பவர் கொடுத்த மிரட்டல் புகார் தொடர்பாக ஜூலை மாதம் 7ஆம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 5 மாத காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
தன்னை சிறையில் அடைக்க பிறப்பித்த ஆணையை நீக்கி, தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கடந்த 21.11.2008-ல் அரசுக்கு ஒரு முறையீட்டு மனுவை குரு அனுப்பினார். இதுதவிர, குருவை சிறையிலடைப்பதற்கு பிறப்பித்த ஆணையை நீக்கக்கோரி ஆதி.ராமசாமி என்பவரும், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அரசுக்குத் தனியாக ஒரு முறையீட்டு மனுவும் அனுப்பியிருந்தார்.
இந்தநிலையில், குருவை சிறையிலடைத்தபோது இருந்த நிலைமைகள் இப்போது இல்லை என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு எதிராகச் சிறையிலடைக்கப் பிறப்பித்த ஆணையை நீக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக நேற்று அரசாணையை ஆளுநர் பர்னாலா பிறப்பித்தார்.
இதன்படி, 1980ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் 14-வது பிரிவில் உள் பிரிவு (1) அளித்துள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி குருவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட, சிறையிலடைக்கும் ஆணையை தமிழக ஆளுநர் பர்னாலா தனது உத்தரவின் மூலம் நீக்கியுள்ளார். இது தொடர்பான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவில், "குரு மற்றும் ஆதி.ராமசாமி ஆகியோரின் அறிக்கைகளை கவனமாக பரிசீலித்து பார்த்ததிலும், அரியலூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் கொடுத்த அறிக்கைகளையும் வைத்து பார்த்ததிலும், குரு கைது செய்யப்பட்டபோது இருந்த சூழல் இப்போது இல்லை என்பதால் அவர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கும் ஆணையை விலக்கிக் கொள்வது என அரசு முடிவு செய்துள்ளது.
எனினும், அவர் மீண்டும், முன்பு பேசியது போல் பேசக்கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் குரு சிறை வைக்கப்பட்டிராத வரையில் அல்லது ஏதேனும் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுத் தண்டனை அனுபவிக்காத வரையில் குருவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.