முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய அரசு நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 800 மெகாவாட் திறனுள்ள 2 யூனிட்களை கொண்ட அனல்மின் திட்டம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இத் திட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், பாரத மிகுமின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.), பிற நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. இத் திட்டத்திற்கான முக்கிய இயந்திரங்கள், பி.எச்.இ.எல். நிறுவனத்திடம் இருந்து பெறப்படவுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியம் இத் திட்டத்தை செயல்படுத்தி மின்நிலையத்தை இயக்கும்.
இத்திட்டத்திற்கான கூட்டு நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூட்டு நிறுவனத்திற்கு, உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு முயற்சி வரைவு ஒப்பந்தத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான கூட்டு நிறுவன ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவர் மச்சேந்திரநாதன், பாரத மிகுமின் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.8,700 கோடி ஆகும்.
இத்திட்டத்திற்கு உடன்குடி கிராமத்தில் 760 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் கண்டயறிப்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்படி நிலத்தில் திட்டம் தொடர்பான பணிகளை செய்வதற்கு நுழைவு அனுமதி 29.2.08ல் வழங்கியுள்ளது. கள ஆய்வு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
மேற்படி நிலத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றும் பணி நடைபெறுகிறது. ஆழ்கடல் துளைகுழி ஆய்வுப் பணி ஏற்கனவே நிறைவு பெற்றது. மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்வதற்கு 13.2.08 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வு பணி முடிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்தப்படும்.
இத்திட்டத்திற்கான சாத்திய கூறு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சாத்தியகூறு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான நிலக்கரி, கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் என்பதால் கடலில் தளம் அமைப்பதற்கான ஆய்வு செய்யும் பணியை ஐ.ஐ.டி. சென்னை நிறுவனம் செய்து அறிக்கை வழங்கியுள்ளது. இத் திட்டத்தின் முதல் யூனிட் மார்ச் 2012லும், 2-வது யூனிட் செப்டம்பர் 2012லும் இயக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.