சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ள நிவாரண அவசர உதவிக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விடிய விடிய மழை பெய்ததால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் நீரில் மிதக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் பள்ளிகளும், சமூக கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கொட்டும் மழையில் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டது போல் இந்த முறை பாதிப்பு இல்லை. முன்னதாகவே தமிழக அரசும், மாநகராட்சியும் திட்டமிட்டு முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததால் மழைநீர் அதிக அளவில் தேங்க வில்லை என்றார்.
சென்னை நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 15 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் ஆகிறது என்று தெரிவித்த அமைச்சர் ஸ்டாலின், பெரம்பூர், கோபாலபுரம் பகுதிகளில் உணவு தயாரித்து அனுப்பப்படுகிறது என்றும் மழைநீர் அடைப்புகளை அகற்றும் பணியில் 1,500 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ரயில்வே, சுரங்கப்பாதைகளில் மழை நீரை வெளியேற்ற 200 மின் நீர் வெளியேற்றிகள் இயக்கப்படுகின்றன என்றும் மரங்கள் முறிந்து விழுந்ததால் அவற்றை வெட்டி அகற்ற 100 எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை மாநகர மக்கள் வெள்ள நிவாரண அவசர உதவிக்கு 1913 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.