''வெள்ள நிவாரணப் பணிகளில் அமைச்சர்களும், அதிகாரிகளும் விரைந்து செயல்பட வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழகத்தில் பெருமழை தொடர்ந்து பெய்து வருகின்ற காரணத்தினால் பல மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன என்றும் அந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து பள்ளிகள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க மாவட்ட அதிகாரிகள் மூலமாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, இருப்பினும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் உடனடியாக வெள்ள நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டு, பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் நாளையதினம் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திலும் வெள்ள நிவாரண பணிகள் குறித்து ஆய்வு நடத்தி மேற்கொண்டு உதவிகள் செய்வது குறித்து அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.