மைசூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை தொடர்ந்து சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர்.
சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும், அவரது தந்தை அய்யண்ணனும் மேட்டூரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு முத்துலட்சுமியின் செல்பேசிக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசிய பின் வீட்டை விட்டு வெளியே வந்த முத்துலட்சுமியை மறைந்திருந்த கர்நாடகா காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரை வாகனத்தில் ஏற்றி சென்ற காவல்துறையினரிடம் முத்துலட்சுமி, என் மீது என்ன வழக்கு இருக்கிறது? எதற்கு கைது செய்கிறீர்கள்? என கேட்டார். அதற்கு காவல்துறையினர் மைசூர் நீதிமன்றத்தில் பிடியாணை உள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்கிறோம் என்றனர்.
கர்நாடகாவில் முத்துலட்சுமி மீது 5 வழக்குகள் இருப்பதாகவும், இந்த வழக்குகளில் தற்போது விசாரணை நடந்து வருகிறது என்றும் இதில் முத்துலட்சுமி சரியாக ஆஜராகவில்லை என்றும் மேட்டூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வழக்குகளில் தான் முத்துலட்சுமி மீது மைசூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்றும் இதில் ஆஜர்படுத்த கர்நாடகா காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்து சென்று இருக்கிறார்கள் என மேட்டூர் காவல்துறையினர் கூறினர்.
முத்துலட்சுமி கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் அவரது வீட்டு முன்திரண்டனர். அப்போது, கர்நாடகா காவல்துறையினர் திட்டமிட்டே முத்துலட்சுமியை கைது செய்து அழைத்து சென்று உள்ளனர் என்று உறவினர்கள் குற்றம்சாற்றினர்.