மின்வெட்டை காரணம் காட்டி உயர் ரக அரிசி விலையை வியாபாரிகள் உயர்த்தக்கூடாது என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன், உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு நடத்தினார்.
அப்போது அமைச்சர் வேலு பேசுகையில், "விவசாயிகள் நெல்லை கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் வழங்கப்படாத அளவுக்கு சாதாரண ரக நெல்லுக்கு ரூ.100ம், சன்னரக நெல்லுக்கு ரூ.120ம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு கொடுத்து நெல்லை கொள்முதல் செய்கிறது.
வெளி சந்தையில் மின்வெட்டை காரணம் காட்டி உயர் ரக அரிசி விலையை வியாபாரிகள் உயர்த்தக்கூடாது. பாமர மக்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் நியாயமான விலையில் அரிசி வாங்க வழிவகை செய்ய வேண்டும். வருமானத்தில் பெரும்பங்கு அரிசிக்கு செலவாவதால் அதன் விலை குறைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்'' என்றார்.
"இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும், இயன்றவரை அரிசி விலையை குறைப்போம் என்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் துளசிங்கம் உறுதி அளித்தார் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.