Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேஷங்களை மாற்றிக் கொள்வது ஜெயலலிதாவிற்கு வாடி‌க்கை : ஆ. ராசா தா‌க்கு!

வேஷங்களை மாற்றிக் கொள்வது ஜெயலலிதாவிற்கு வாடி‌க்கை : ஆ. ராசா தா‌க்கு!
, புதன், 26 நவம்பர் 2008 (05:22 IST)
அலைவரிசை ஒதுக்கீடு தொட‌ர்பாக ஜெயலலிதா கூ‌றி‌யு‌ள்ள புகாரு‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ள ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ஆ. ராசா, சட்டமன்றத்தில் ஒரு சாதி சாயம் பூசிக் கொள்வதும், மற்ற இடங்களில் வேறு வேறு சாயங்கள் பூசிக் கொள்வதும், வேஷங்களை மாற்றிக் கொள்வதும் ஜெயலலிதாவிற்கு பழக்கப்பட்டு போனவை எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுதொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரண்டு முறை மாநிலத்தின் முத‌ல்வராக இருந்தவர், டான்சி நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியதில் தன் மனசாட்சிப்படி கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்ட ஜெயலலிதாவின் அலைவரிசை குறித்த அறிக்கை விவரமற்ற வேடிக்கையான பேத்தலாக இருப்பதில் ஆச்சரியமில்லை என்றாலும், அவருக்கு சுருக்கமான பதில் தருவதன் மூலம் மற்றவர்களுக்கும் உண்மை மறுபடியும் போய்ச் சேரும் என்ற நம்பிக்கையில் பதில் தர விழைகிறேன்.

தன்னுடைய அறிக்கையில், "ராசாவின் கூற்றில் அதிக நியாயம் இருப்பதாக தெரியவில்லை'' என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் ஓரளவு நியாயமாவது ஜெயலலிதாவிற்கு தெரிந்திருக்கிறதே என்பது வியப்பிற்குரிய ஒன்றுதான்.

'ஸ்வான்', 'யுனிடெக்' நிறுவனங்களில் உள்ள பங்கு நிறுவனங்களின் பட்டியலும் அவைகளின் பங்கு மாற்றமும் நிதித்துறைக்கும் கம்பெனி விவகாரத் துறைக்கும் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். இருந்தாலும், இந்த நிறுவனங்கள் தங்கள் பங்குகளை தளர்த்திக் கொண்டு அரசு அனுமதித்துள்ள 74 ‌விழு‌க்காடு அன்னிய முதலீட்டு குறியீட்டுக்குள்ளாக தங்கள் நிறுவனத்தின் வியாபார அபிவிருத்திக்காக மட்டுமே அன்னிய முதலீடுகளைப் பெற்றுள்ளன.

அன்னிய முதலீடுகளை கண்காணிக்கும் நிதித்துறையும் இந்த நிறுவனங்கள் தங்கள் உரிமங்களையோ, அலைவரிசையையோ அல்லது நிறுவனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் பங்குகளையோ விற்பனைக்கு உட்படுத்தவில்லை என்றும் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளது. எனவே, இந்த நிறுவனங்கள் பெற்றுள்ள அன்னிய முதலீடு தற்போது இயங்கும் பிற தொலைத் தொடர்பு தனியார் நிறுவனங்கள் கடந்த காலங்களில் செய்து கொண்ட சட்டப்படியான முதலீடுகளைப் போன்றதே என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளேன்.

1994ஆ‌ம் ஆண்டு உரிமமும், அலைவரிசையும் ஏலம் விடப்பட்டபோது ஏலம் எடுத்த நிறுவனங்களால் ஏலத்தொகை செலுத்த இல்லாமல் போனது. அதனால், வருவாயில் பங்கு என்ற அடிப்படையில் உரிமம் மற்றும் அலைவரிசைகளை வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தரைவழி தொழில்நுட்பம், ஜி.எஸ்.எம்.தொழில்நுட்பம், சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம் ஆகியவைகளை கொண்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய `ஒருங்கிணைந்த உரிமம்' 2003ஆ‌ம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோது 2001ஆ‌ம்ஆண்டில் பெறப்பட்ட ஏலத் தொகையான 1,650 கோடி ரூபாயை உரிமத்தின் அடிப்படை விலையாக ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்தது.

வருவாயில் பங்கு எனும் அடிப்படையில், உரிமத்தின் மீதும், அலைவரிசை மீதும் வருவாய் விகிதத்தை அவ்வப்போது உயர்த்தி பரிந்துரை செய்யும் ஒழுங்குமுறை ஆணையம் உரிமக் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை வழங்கவில்லை. எனவேதான், தொடர்ந்து இந்தத் துறையில் 50-க்கும் மேற்பட்ட உரிமங்கள் நான் பொறுப்பேற்றதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே தொகைக்கு வழங்கப்பட்டு உள்ளன.

இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஏலம் விடப்பட வேண்டியது அல்ல என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்ததன் அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், அதன்மீது வருவாயில் பங்கு எனும் அடிப்படையில் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படுகிறது என்றும் பலமுறை விளக்கம் அளித்தும் அவையெல்லாம் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காக ஜெயலலிதாவிற்கு போனதில் வியப்பொன்றும் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர உயர தொடர்ந்து இந்த வருவாயும் உயரும். எனவே, அரசுக்கு இழப்பு என்பதே கற்பனையானது என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

ஜெயலலிதாவின் அறிக்கையில் சொல்லப்பட்டதுபோல் `சந்தேகப்படக்கூடியதாகவும் அரசியல் தொடர்புடன் கூடியதாகவும் உள்ளது' என்று கண்காணிப்பு ஆணையம் எங்கேயும் விமர்சிக்கவில்லை. பத்திரிகைகளில் வெளியான பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் கண்காணிப்பு ஆணையம் அவ்வப்போது பல்வேறு துறைகளுக்கும் விளக்கம் கேட்பது இயல்பான வழக்கமான நடவடிக்கை ஆகும். அந்த வகையில் கேட்கப்பட்ட விவரங்களுக்கு விளக்கமும் துறை செயலாளர் அளவிலேயே அனுப்பப்பட்டுவிட்டது.

அதேபோல் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல `ஊழல் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்வதாக' நான் எப்போதுமë கூறவில்லை. நான் ஊழல் நிரூபிக்கப்படும் வரை சண்டி வழக்காடுபவனும் அல்ல. எந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினால் ராஜினாமா செய்யத் தயார் என்றுதான் கூறினேன்.

ஜெயலலிதா உட்பட எல்லோரும் `ஏலம் விட்டிருக்க வேண்டும்' என்று தொலைத் தொடர்பு ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிரான ஆலோசனைகளை சொல்கிறார்களே தவிர, விதிமீறல்கள் என்று எவரும் இதுவரை பட்டியலிட இயலவில்லை. தனது இயலாமைக்கு என்னை ராஜினாமா செய்யச் சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்த யோக்கியதையும் இல்லை.

மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க தலைவர் நம்பூதிரி இரண்டா‌ம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டிய தலைவர் கலைஞர், நான் இந்த துறைக்கு உழைத்து முன்னேறி வந்திருப்பதாக தன்னுடைய பெருமிதத்தை வெளிப்படுத்தியபோது அவரது உயிரணுக்களில் கலந்துவிட்ட சமூகநீதிக் கொள்கை காரணமாக, நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிட்டாரே தவிர, ஜெயலலிதாவைப் போல தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரை விமானத்தில் இருந்து தள்ளி விடுவதற்காகவோ, அரசு விழாக்களில்கூட காலில் விழ வைத்து கைகட்டி வாய்பொத்தி நிற்க வைத்து மகிழ்வதற்காகவோ அல்ல.

சட்டமன்றத்தில் ஒரு சாதி சாயம் பூசிக் கொள்வதும், மற்ற இடங்களில் வேறு வேறு சாயங்கள் பூசிக் கொள்வதும், வேஷங்களை மாற்றிக் கொள்வதும் ஜெயலலிதாவிற்கு பழக்கப்பட்டு போனவைகள் ஆகும். அவைகள் தலைவர் கலைஞருக்கு அன்னியப்பட்டவை மட்டுமல்ல அருவருப்பானவையும்கூட.

சட்டப்படி நடைபெற்றுள்ள உரிமம் மற்றும் அலைவரிசை ஒதுக்கீடு ஜெயலலிதாவின் கண்களுக்கு ராட்சத ஊழலாக தெரிவது அவரது ஊழல் மலிந்த அரசியல் வாழ்விற்கு சாத்தியம் என்றாலும் மற்றவர்கள் உண்மையை உணர்ந்து கொள்ளவே இந்தப் பதில் அறிக்கையை அளிக்கின்றேன்" எ‌ன்று ஆ.ராசா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil