முதல்வர் கருணாநிதி தலைமையில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம், பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் துயர் துடைக்க ஒன்றுபட்டு குரலெழுப்புவதற்கு பதிலாக, அரசியல் அணி வகுப்பை உருவாக்குவதற்கான ஒரு வடிவமாக திசைதிரும்பி போனதால் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொள்ளவில்லை என்று அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டம், பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் துயர் துடைக்க ஒன்றுபட்டு குரலெழுப்புவதற்கு பதிலாக, அரசியல் அணி வகுப்பை உருவாக்குவதற்கான ஒரு வடிவமாக திசைதிரும்பி போகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே, இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொள்ளவில்லை.
எனவே, இலங்கையில் நடைபெறும் இருதரப்பு ஆயுத மோதல்களையும் நிபந்தனையின்றி நிறுத்தப்பட வேண்டும் என்றும், போர் நிறுத்தம் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் தீர்வுக்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசு ராஜீய ரீதியில் தலையிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியிருப்பதையும் காண முடிகிறது. அகதிகள் வாழ்ந்து வரும் முகாம்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற தகவல்கள் வருகின்றன.
எனவே, அவர்களது வாழ்க்கைக்கான பாதுகாப்பு, சுகாதாரம், குடியிருப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்று வரதராஜன் கூறியுள்ளார்.