வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பாம்பன்-நாகப்பட்டினம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி காற்றுடன் கனத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக கனத்த மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்கிறது.
இந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது, இன்று மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
தற்போது, இலங்கைக்கு தென்மேற்கிலும், தமிழகத்தில் பாம்பனில் இருந்து தென்கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தூரத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
வடமேற்கு திசையை நோக்கி நகரும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பாம்பன்-நாகப்பட்டினத்திற்கு இடையே இன்று (புதன்கிழமை) மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் கனமழை பெய்யும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். சில சமயங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடலூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சூறாவளி காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் 3ஆம் எண் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது.