இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரயில், சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்துக்கட்சியினரை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய - மாநில அரசுகள் வலியுறுத்தக்கோரியும் தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., புதிய தமிழகம் உள்பட பல்வேறு கட்சியினர் ரயில், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு தேசியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் தஞ்சை, திருவாரூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், நாகை உள்பட தமிழகம் முழுவதும் இன்று நடந்த ரயில் மற்றும் சாலை மறியலில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் உடனே வேண்டும், ஈழத்தமிழர்கள் உரிமை போர் வெல்லட்டும், மத்திய அரசே இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதே என்று கோஷம் எழுப்பினார்கள்.