போர் நிறுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பதுடன் நிற்காமல், சிறிலங்க அரசிற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வலியுறுத்த பிரதமரை முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு டிசம்பர் 4ஆம் தேதி சந்தித்துப் பேசுவது என்றும், அதற்கு முன்னர் வரும் 28ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை இனப் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சட்டமன்றக் கட்சிக் தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர்கள் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் டி.சுதர்சனம், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் துணைத் தலைவர் டி.யசோதா, பா.ம.க. தலைவர் ராமதாஸ், பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் கோ.க.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், சட்டமன்ற உறுப்பினர் எச்.அப்துல் பாசித், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் எஸ்மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றபட்ட ஒரே தீர்மானம் வருமாறு:
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், இந்தியப் பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்துக்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரே குரலாக இல்லாவிட்டாலும் தங்களால் இயன்ற அளவிற்கு தனித்தனியாகவும், ஒரு சிலர் இணைந்தும் போர்க்குரல் கொடுத்து வருகிறார்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து 23.4.08 அன்றும், 12.11.08 அன்றும் 2 முறை தமிழ்நாடு சட்டப் பேரவையிலே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு முறையாக அனுப்பி வைத்திருக்கின்றோம்.
14.10.08 அன்று அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனையும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். இதுவரை எங்கும் நடைபெறாத அளவிற்கு 24.10.08 அன்று வரலாறு காணாத மனிதச் சங்கிலி ஒன்றினை நடத்திக்காட்டியிருக்கின்றோம். தமிழகத்திலே உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும், அரசியல் சார்பற்ற அமைப்புகளும், ஆர்ப்பாட்டங்களையும், மறியல்களையும், ரயில் நிறுத்தம் போன்ற போராட்டங்களையும் செய்து தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித் திருக்கின்றன.
திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள், சின்னத்திரையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பேரணி நடத்தி, உண்ணாவிரதம் நடத்தி இலங்கை தமிழரின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள். வாழ்வாதாரம் தேடி கடலுக்கு மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களின் துயரம் களையப்பட வேண்டும் என்றும், அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவதியுறும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பாகவும் நிவாரண உதவிகள் அனுப்புவதற்காக நிதிஉதவி கோரி தமிழக முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று இதுவரை 37 கோடி ரூபாய்க்கு மேல் நிதி, ஒரு மாதக் காலத்திற்குள்ளாகவே சேர்ந்துள்ளது.
நாம் எடுத்த இந்த முயற்சிகளின் பயனாகவும், மத்திய அரசு எடுத்துக் கொண்ட அக்கறையின் காரணமாகவும், போரினால் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இடர் உதவி பொருட்களை செஞ்சிலுவைச் சங்க அமைப்புகளின் மூலமாகவும் இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் வழியாகவும் நம்மால் அனுப்பி வைக்க முடிந்திருக்கிறது.
அது போலவே மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களை சுடக் கூடாது என்று உடன்பாடு காண முடிந்துள்ளது.
எனினும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும், உலகத்தமிழர்களும், நாளும் விரும்புகின்ற போர் நிறுத்தம் இலங்கையிலே இதுவரையிலே கைகூடவில்லை. நாம் கேட்டுக் கொண்டவாறு, போர் நிறுத்தம் செய்வதற்கு தயார் என்று ஒருதரப்பினர் அறிவித்த பிறகும், இலங்கை அரசு போரை நிறுத்த மாட்டேன் என்று அடம் பிடிப்பதோடு இரண்டொரு நாட்களில் இலங்கை தமிழர்களை எல்லாம் கொன்று ஒழிப்பேன் என்று கண்ணை மூடிக் கொண்டு வெறித் தாக்குதல் நடத்தும் செய்தி அன்றாடம் ஏடுகளில் வந்து கொண்டிருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் பெரும் பகுதியினராக வாழ்கின்ற பகுதிகளை முற்றிலுமாகப் பிடிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று இலங்கை சிங்கள அரசு தொடர்ந்து நடத்தி வரும் போரில் பெருமளவில் அப்பாவித் தமிழர்களும், அவர்தம் குழந்தைகளும்தான் கொல்லப்படுகிறார்கள் என்றும், பெரும்பாலோர் அகதிகளாக்கப்பட்டு அல்லல்படுகிறார்கள் என்றும் துயரச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
பள்ளிகளுக்குச் செல்லும் வயதுடைய பல்லாயிரக்கணக்கான தமிழ் சிறார்கள் பல மாதங்களாக கல்வி கூடங்களுக்கே செல்ல முடியாத நிலையில் காடுகளிலும், மலைப்பகுதிகளிலும், தஞ்சம் புகுந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாலே போதும் என்று திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகள் நம்மைப் பொறுமையாக இருக்க விடாத நிலையில் இனி என்ன செய்வதென்று யோசித்ததில், மத்திய அரசு, இலங்கை அரசுடன் மேலும் மேலும் வேண்டுகோள் என்ற அளவில் நில்லாது, போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட கடுமையான குரல் கொடுத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி தலைவர்களின் இந்த கூட்டம் வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகின்றது.
மத்திய அரசு தன்னால் இயன்ற அளவிற்கு குரல் கொடுத்து வருகின்றது என்பதை தமிழகம் உணர்ந்த போதிலும், இலங்கை அரசு அதனை மதிக்காத நிலையில், இந்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் மேலும் வேகத்தை காட்ட வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துகின்றது.
இந்த தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்கள், தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் டிசம்பர் 4ஆம் தேதி அன்று டெல்லியில் பிரதமரை சந்திப்பது என்றும், அதற்கிடையே நவம்பர் 28ஆம் தேதி அன்று தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்திப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.