இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக டிசம்பர் 4ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பது என்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், இதுவரை மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்ற கெடுவுக்கு பின்னரும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாதது குறித்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இன்றைய கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சிக் குழு ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் டிசம்பர் 4 ஆம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவுள்ளது.
அதற்கு முன்பாக வரும் 28 ஆம் தேதி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமரை சந்திப்பது என்றும் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் டி.சுதர்சனம், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் துணைத் தலைவர் டி.யசோதா, பா.ம.க. தலைவர் ராமதாஸ், பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் கோ.க.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், சட்டமன்ற உறுப்பினர் எச்.அப்துல் பாசித், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் எஸ்மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.