Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அமை‌ச்ச‌ர் ராசா பதவி விலக வே‌ண்டு‌ம்: ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்!

மத்திய அமை‌ச்ச‌ர் ராசா பதவி விலக வே‌ண்டு‌ம்: ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்!
''ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்'' எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என்ற மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமை‌ச்ச‌ர் அ.ராசாவின் கூற்று வேடிக்கை மிகுந்ததாக இருக்கிறது.

கைபேசி பணிகளுக்கான இரண்டாவது தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான அனுமதியை சர்வதேச அளவில் ஏலம் விடுவதற்கு பதிலாக 'முதலில் வருபவருக்கு முதலில் தரப்படும்' என்ற அடிப்படையில் அளித்தார் என்ற குற்றச்சாட்டு ராசா மீது சுமத்தப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல், 6.2 மெகாஹர்ட்ஸ் என்று நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் மேல் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவர் ஆளாகியுள்ளார்.

தனக்கு முன்பிருந்த அமை‌ச்ச‌ர் பின்பற்றிய முறையில் இருந்து தான் விலகிச் செல்லவில்லை என்பதே ராசாவின் வாதமாகும். இவருக்கு முன்பிருந்த அமைச்சரும் தி.மு.க.வை சார்ந்தவர் தான் என்பதாலும், அவர் பதவியில் இருந்து விலகும் வரை, அந்தக் கட்சியின் தலைவரான கருணாநிதியின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றியவர் தான் என்பதாலும், ராசாவின் கூற்றில் அதிக நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு குறித்த பொது நல வழக்கு ஒன்றை டெல்லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அனுமதித்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலக தயார் என்று ராசா வேடிக்கையான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அவர் குற்றவாளி என்று யார் நிரூபிக்க வேண்டும்?. ஊடகங்களா?, எதிர்க்கட்சிகளா?, புலனாய்வு அமைப்புகளா?, நீதிமன்றங்களா? மேற்படி அனைத்து அமைப்புகளும் அவர் குற்றவாளி என்று சொன்னால் பதவி விலகுவது என்ற கேள்விக்கு இடம் எங்கே இருக்கிறது?

குற்றவாளி என்று சொல்லிவிட்டால் சிறை கம்பிகளுக்குப் பின் நின்றுகொண்டு கம்பி எண்ணுவதில் காலத்தை கழித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!. ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ராட்சத ஊழலின் பின்னால் உள்ள சதிகாரர்கள் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்'' எ‌ன்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil