இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விவாதிக்க சட்டமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நாளுக்கு நாள் இலங்கையில் வாழும் தமிழர்கள் உயிர் உடமைகளை இழந்து வாழ்வதற்கே பயந்து பாதிக்கப்படும் நிலையில் மேலும் மேலும் நம் சிந்தை கலக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அது பற்றி மத்திய அரசுடன் தொடர்பு கொள்ளவும், மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யவும், சட்டமன்றத்தில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நாளை (இன்று) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் கருணாநிதி நேற்று அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. சட்டமன்றத் தலைவர் கோ.க.மணி, விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற கட்சித் தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று ஏற்கனவே அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டத்தை புறக்கணித்துள்ளது.