இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன், நல்லகண்ணு, டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய - மாநில அரசுகள் வலியுறுத்தக்கோரியும் நவம்பர் 25ஆம் தேதி ரயில், சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., புதிய தமிழகம் உள்பட பல்வேறு கட்சியினர் ரயில், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு இன்று காலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., புதிய தமிழகம், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது போர் நிறுத்தம் உடனே வேண்டும், ஈழத்தமிழர்கள் உரிமை போர் வெல்லட்டும், மத்திய அரசே இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதே என்று கோஷம் எழுப்பினார்கள்.
இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு தேசியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் பழனிச்சாமி, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், ஷீமாபஷீர், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பார்வர்டு பிளாக் கதிரவன், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் துரையரசன், தமிழ்தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தியாகு, பெரியார் பொதுவுடமை கட்சியை சேர்ந்த தமிழேந்தி, தமிழ் தேசிய இயக்க பொருளாளர் பத்மநாபன், தமிழ் படைப்பாளர் முன்னணி தலைவர் ஜெயப்பிரகாசம் உள்பட பலர் கைதானார்கள்.
இவர்களில் 50க்கும் மேற்பட்ட பெண்களும் இருந்தனர். கைதான அனைவருக்கும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
இதில் பேசிய தா.பாண்டியன், தமிழகத்தில் இன்று ஆயிரக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாகவும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தி.மு.க அமைச்சர்கள் ஒருவர் கூட பிரதமரிடம் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தங்களுடைய மறியல் போராட்டம் இன்று நடைபெறும் நிலையில், முதல்வர் கருணாநிதி சட்டமன்றக் கட்சிக் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இலங்கை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க எடுத்த முடிவு தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், இனியாவது பிரதமரை சந்தித்து நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் தா.பாண்டியன் கூறினார்.
தஞ்சையில் நடந்த ரயில் மறியலில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் தபால் நிலையம் நோக்கி 300க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்றனர். மாவட்ட காவல்துறை அலுவலகம் அருகே பேரணி வந்தபோது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மறியல் போராட்டத்தின் போது, இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோஷங்கம் எழுப்பப்பட்டது. மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராவும் கோஷங்கள் எழுப்பினர்.