மழை காரணமாக சாலைகளில், தெருக்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடவோ, அப்புறப்படுத்தவோ முயல வேண்டாம் என்றும் இது குறித்து உடனடியாக மின்சார வாரியத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு தலைமை மின்ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த சமயத்தில், மின்சார விபத்துக்களை தடுக்கும் பொருட்டு மின் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு தரவேண்டுகிறோம்.
குறிப்பாக, மின்கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகள் அருகே உள்ள மரங்களில் ஏறுவதை தவிர்க்க வேண்டும். எரியும் மின் விளக்குகளை தொடவேண்டாம்.
சாலைகளில், தெருக்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடவோ, அப்புறப்படுத்தவோ முயல வேண்டாம். இது குறித்து உடனடியாக மின்சார வாரியத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பூமிக்கு அடியில் மின்சார கேபிள் செல்லும் இடங்களில் மின் அதிர்ச்சி தென்பட்டால் உடனே அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களில் ஆடு, மாடு போன்றவற்றை கட்டக்கூடாது.
மழை காலங்களில் மின் கம்பம், கேபிள்கள் போன்றவற்றை தொடக்கூடாது. உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் இடங்களில் கட்டிடங்கள் கட்டும் பணிகளை மின்சார வாரியத்தின் ஒப்புதல் இன்றி கட்டக்கூடாது. மின் கம்பங்கள் அருகில் குழந்தைகள் விளையாடும் போது பட்டம் விடுதல், ஓடி, ஆடி விளையாடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மின்மாற்றி அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது. தீ விபத்து மற்றும் சர்க்யூட் கோளாறு சமயங்களில் மின் இணைப்பு சுவிட்சுகள் இயக்குவதை தடை செய்ய வேண்டும். மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க கூடாது. மணல் அல்லது டி.சி.பி.தீயணைப்பானை கொண்டு தீயை அணைக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.