தமிழகம், புதுவையில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கனத்த மழையில் சிக்கி, இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர்.
வங்க கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி முழுவதும் கடந்த 5 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னை திருவான்மியூர் பகுதியில் மழை தண்ணீரில் கசிந்து இருந்த மின்சாரம் தாக்கி ரவிச்சந்திரன்(47) என்பவர் பலியானார். இதேபோல் ஜெ.ஜெ. நகரில் மின்சாரம் தாக்கி சதாம் உசேன் என்பவர் இறந்தார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த கவுதம் என்ற 7 வயது சிறுவன், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவகுமார் (5), கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (60) ஆகியோரும் மழைக்கு பலியானார்கள்.
விருத்தாசலம் ஆலடி ரோட்டை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை, மழையால் இடிந்து விழுந்ததில், கழிவறைக்குள் இருந்த கொளஞ்சியின் மகள் சத்யா (18), இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் மழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். மேலக்காட்டூரைச் சேர்ந்த முகமது சுல்தான் என்பவர் தனது வீட்டில் உள்ள இரும்புக் கதவை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் துடி துடித்தார் அவரை காப்பாற்ற சென்ற அவரது மனைவி சபுரா பீவியும் மின்சாரத்தால் தாக்கப்பட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களுடைய மகன் சையது அலி ஓடிவந்து தனது பெற்றோரை காப்பாற்ற முயன்றார். இதில் 3 பேரும் இறந்தனர். ஒரத்த நாட்டில் குப்பம்மாள் என்ற பெண்ணும், திருவிடைமருதூரில் காமராஜ் என்பவரும் அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்ததால் பலியானார்கள். இதேபோல் புதுவையிலும் மழைக்கு 4 பேர் பலியாகி இருக்கிறார்கள்.