சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடந்த மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 மாணவர்கள் தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக சித்திரைச்செல்வன் உள்ளிட்ட 26 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் சித்திரைச்செல்வன் காயமடைந்தார். பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோரால் சித்திரைச்செல்வன் தான் முதலில் தாக்கப்பட்டார்.
ஆனால், பாரதிகண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சித்திரைச்செல்வன் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதில் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்கு தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சித்திரைச்செல்வன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு விழாவுக்காக அடித்த சுவரொட்டிகளில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்பதை வேண்டுமென்றே சேர்க்கவில்லை. இந்தப் பிரச்சனை தொடர்பாக, சட்டக் கல்லூரியில் பருவத் தேர்வு எழுத வந்தபோது பாரதிகண்ணன், ஆறுமுகம் உள்ளிட்ட மாணவர்களால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மிரட்டப்பட்டனர்.
எனவே, நவம்பர் 12ஆம் தேதி தேர்வு எழுத வந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களைப் பாதுகாக்கவே மனுதாரர்கள் கல்லூரி வளாகத்துக்கு வந்தனர். மனுதாரர்களில் பத்து பேர் மீது வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை.
சட்டக் கல்லூரி வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சண்முகம் ஆணையத்திடம் எங்கள் தரப்பு விளக்கத்தை மனுவாக அளிக்க உள்ளோம். ஆகையால், எங்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.
மேலும், சட்டக் கல்லூரி மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன், அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகிய 3 பேரும் முன் பிணைக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.