இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விவாதிக்க முதல்வர் கருணாநிதி தலைமையில் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக அ.இ.அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவிக்கையில், சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்துவது மிகப்பெரிய மோசடி நாடகம் என்றும், கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இக்கூட்டத்தை ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
இலங்கைக்கு தந்த ராடார்களை திரும்ப பெற வேண்டும்; வட்டி இல்லாக் கடனை ரத்து செய்ய வேண்டும்; ஆயுத உதவி செய்யக்கூடாது; உதவிக்கு அனுப்பிய ராணுவ நிபுணர்களை திரும்ப அழைக்க வேண்டும்; சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தரக்கூடாது என்று ம.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் மு.கண்ணப்பன் விடுத்த கோரிக்கையை முதல்வர் ஏற்காததால், சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ம.தி.மு.க. கலந்து கொள்ளாது என்று வைகோ கூறியுள்ளார்.
இலங்கையில் போரை நிறுத்தக்கோரி மறியல் போராட்டம் நடத்துவதால், சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
போர் நிறுத்தம் செய்ய மனிதாபிமான முறையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் தேவையற்றது என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்