இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாகத் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நாளை நடக்கவுள்ள சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக ம.தி.மு.க., தே.மு.தி.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.
''இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய நாளை சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எனது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது'' என்று முதல்வர் கருணாநிதி இன்று கூறியுள்ளார்.
"இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராகவும், கட்சி தலைவராகவும் கோ.க.மணி இருந்த போதிலும், நிறுவனத் தலைவர் என்ற முறையில் ராமதாஸ் கலந்து கொள்வார்" என்ற கருணாநிதி, "அதைப் போலவே ம.தி.மு.க. என்றால் சட்டமன்ற கட்சி தலைவராக மு.கண்ணப்பன் இருக்கிறார். அவரும் கலந்து கொள்ளலாம், அந்த கட்சியின் பொதுச்செயலரான வைகோவும் கலந்து கொள்ளலாம்" என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று ம.தி.மு.க., தே.மு.தி.க., இந்தியக் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட சில கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.