அருந்ததியருக்கு 3 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு நியமித்த நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம், அருந்ததியருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அறிக்கையினை தற்போது முதல்வரிடம் ஒப்படைத்துள்ளது.
தாழ்த்தப்பட்டோரிலேயே சமூக, பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர் மக்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் வகையில் நியமிக்கப்பட்ட இந்த ஆணையம், அருந்ததியருக்கான 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட பரிந்துரை செய்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் மனப்பூர்வமாக வரவேற்று பாராட்டுகிறது.
இதுதொடர்பாக வரும் 27ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு முன்னதாக தலித் சமூகத்தின் தலைவர்களை ஒருங்கிணைத்து, இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவது மிக மிக இன்றியமையாத தேவை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது. ஆகவே தமிழக முதல்வர் அனைத்து தலித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்பாக காவல்துறை நடவடிக்கைகள் வெளிப்படையாக தலித் மாணவர்களுக்கு எதிராகவே அமைந்துள்ளன. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சண்முகம் விசாரணை ஆணையத்தில் குறைந்தது 3 நீதிபதிகள் இடம்பெற செய்ய வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.