சென்னையில் டிசம்பர் 4ஆம் தேதி நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட உள்ள உத்திகள், யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் தெரிவித்தார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சனை தவிர மற்ற அனைத்து விவகாரங்களிலும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது என்றார்.
கம்யூனிஸ்டு கட்சி தலைமை உத்தரவுபடி அக்கட்சியினர் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என்று தெரிவித்த வரதராஜன், இதுகுறித்து எங்களது தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம் என்றார்.
சென்னையில் டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலர் பிரகாஷ்காரத் உள்பட பல தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்று தெரிவித்த வரதராஜன், இதில் வரும் பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட உள்ள உத்திகள், யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
எங்கள் கட்சியை பொறுத்தவரை காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பதில் தெளிவாக உள்ளோம். அதனால்தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களது கொள்கைகளும் எங்களது கொள்கைகளும் ஒத்துப்போகும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து நாங்கள் தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம் என்று வரதராஜன் கூறினார்.