கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் சரியாகி விடும் என்று நெய்வேலி மின்சாரத்துறை இயக்குனர் சேதுராமன் தெரிவித்தார்.
நெய்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
நிலக்கரியை அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வரும் கன்வேயர் பெல்ட் மழையில் நனைந்து விட்டது என்று தெரிவித்த சேதுராமன், இதனால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுவைக்கு அனுப்பப்படும் மின் விநியோகம் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது என்று கூறிய சேதுராமன், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் சரியாகி விடும் எனவும் தெரிவித்தார்.