வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத் தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பரவலான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் இலங்கை அருகில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரமாக தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் தரைக்காற்று பலமாக வீசும். சென்னை நகரில் மேகமூட்டம் காணப்படும். அவ்வப்போது மழை பெய்யும். ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் நேற்று மாலை லேசான மழை பெய்ததது. இரவில் அதிகரித்த மழை விடிய விடிய நீடித்தது. அதிகாலையில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது.
தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை, ஜி.என். செட்டி சாலை, ஸ்டெர்லிங் ரோடு, கணேசபுரம், கொடுங்கையூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
மாவட்டங்களிலும் பலத்த மழை!
திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மூன்றாவது நாளாக இன்றும் பலத்த மழை பெய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லை, குமரி, மதுரை மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இம்மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
திருச்செந்தூர், ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் கடல்சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.
இதேபோல, தேனி, கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன.