நெய்யாறு அணையை கேரள அரசு உடனடியாகத் திறந்துவிட வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் சார்பில், 24-ஆம் தேதி நாகர்கோவில் வடசேரி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட அண்டுகோடு, இடைக்கோடு, பாகோடு, விளவங்கோடு, குளப்புறம், மெதுகும்மல், ஆறு தேசம், ஏழு தேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், நெய்யாறு இடதுகரை கால்வாய் தண்ணீரை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களையே முக்கியத் தொழிலாகச் செய்து வருகின்றனர். நெய்யாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு கேரள அரசு தண்ணீர் திறந்து விடாததன் காரணமாக இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மக்களுக்கு நியாயமாக தரவேண்டிய தண்ணீருக்கு கேரள அரசு காசு கேட்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது. இதுபோன்ற ஒரு கடிதத்தை கேரள அமைச்சர் எழுதி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற கடிதத்தை கேரள அரசு எழுதிய பிறகு அதன் மீது தி.மு.க. அரசு என்ன சட்டபூர்வமான நடவடிக்கையை எடுத்தது என்பதை முதலமைச்சர் கருணாநிதி விளக்க வேண்டும்.
எனவே தி.மு.க. அரசைக் கண்டித்தும், நெய்யாறு இடதுகரை கால்வாய் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தியும், நெய்யாறு அணையை கேரள அரசு உடனடியாகத் திறந்துவிட வலியுறுத்தியும், அ.இ.அ.தி.மு.க. கன்னியாகுமரி மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில், 24-ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.