சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியையடுத்து, இன்று காலை பயணிகள் மத்தியில் அங்கு பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இந்தி மொழியில் பேசிக்கொண்டிருந்த 2 பேர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததாக அங்கிருந்து மர்ம நபர் ஒருவர் காவல்துறையினருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ரயில் நிலையம் விரைந்த காவல் துறையினர் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
எனினும், தொடர்ந்து பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்குப் பிறகே உள்ள செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தொலைபேசியில் பேசிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.