சிறிலங்க கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டணத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்கக் கோரி அப்பகுதி மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ஜகதாப்பட்டணத்தைச் சேர்ந்த 17 மீனவர்களை, தங்கள் கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக குற்றம்சாற்றி சிறிலங்க கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், அப்பகுதி மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சிறிலங்க கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விடுவிக்கும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து, ஜகதாப்பட்டணம் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த போராட்டத்தால் ஜகதாபட்டணம் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி விசை படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.