சென்னை, சட்டக் கல்லூரி மோதலை வேடிக்கைப் பார்த்த காவல்துறையைக் கண்டித்தும், இச்சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " 12.11.2008 அன்று காவல் துறையினரின் முன்பே, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மற்றொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய சம்பவத்தைப் பார்த்த தமிழக மக்கள், காவல்துறை என்ற ஒன்று தமிழகத்தில் இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள். மேற்படி சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இது குறித்து நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் அறிவித்தார். சென்னை உயர் நீதிமன்றமும் இது குறித்து அறிக்கை அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, "சட்டக் கல்லூரி விவகாரத்தில் ஜெயலலிதா உங்களைக் குற்றஞ்சாட்டி, தார்மீகப் பொறுப்பேற்று நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்கிறாரே? அவரை போலவே வைகோவும் அதே கருத்தைச் சொல்லியிருக்கிறாரே?'' என்று கேட்டதற்கு, "இதிலேயிருந்து என்ன தெரிகிறது என்றால், என்னை ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்வதற்காகவே மாணவர்களின் இரு சாராரையும் இவர்களே தூண்டிவிட்டு சண்டை போடச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது'' என்று கருணாநிதி பதில் அளித்திருக்கிறார்.
நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு பிரச்சனை குறித்து முதலமைச்சர் கருணாநிதி இது போன்று பேட்டி அளிப்பது விசாரணை ஆணையத்தையே கேலிக் கூத்தாக்குவது போல் உள்ளது.
சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கொடூரச் சம்பவத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவல் துறையைக் கண்டித்தும், இச்சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்று முதலமைச்சர் கருணாநிதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில், 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில், சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.