சென்னை அசோக் நகரில், ஓய்வு பெற்ற தமிழ்நாடு கனிம வளத்துறை அதிகாரி, அவரது மனைவி, வேலைக்காரியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததுடன் வீட்டில் இருந்த பணம், நகைகளை மர்ம கும்பலைச் சேர்ந்த சிலர் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
சென்னை அசோக் நகர் காவல்துறை பயிற்சி கல்லூரி அருகே உள்ள நடேசன் தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (74). இவர் தமிழ்நாடு கனிம வளத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவரது மனைவி கஸ்தூரி(73). இவர்கள் வீட்டில் அன்பரசி (17) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். உன்னிக்கிருஷ்ணன் என்பவர் தினமும் காலையில் வந்து சமையல் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்றிரவு சரவணன் வீட்டுக்குள் திடீரென புகுந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களைக் காட்டி சரவணன், அவரது மனைவி, வேலைக்காரியை மிரட்டியுள்ளனர்.
அவர்களிடம் நகை, பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டனர். இதனால் அவர்களுடன் சரவணன் கடும் வாக்குவாதம், மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைத் தடுக்க வந்த அவரது மனைவி, வேலைக்காரியையும் அவர்கள் வெட்டினர்.
இதனால் உயிருக்குப் போராடிய அவர்கள் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்கள். பின்னர் வீட்டைச் சூறையாடிய அந்த மர்ம கும்பல் பீரோலை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதையடுத்து, இன்று காலை சமையல் வேலை செய்ய வந்த உன்னிகிருஷ்ணன் வீட்டுக்குள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் மர்ம கும்பலை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.