இலங்கை தமிழர் படுகொலைக்கு முடிவு கட்ட, நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழகத்திலும், டெல்லியிலும் அரசியல் மாநாடுகளை நடத்த முதல்வர் கருணாநிதி முன்வந்தால் அவருக்கு பின்னால் அணிவகுத்து நிற்க தயார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில், இலங்கை தமிழர் படுகொலை கண்டித்து பா.மா.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு பிழைக்கச் சென்றவர்கள் அல்ல. அந்த மண்ணின் மைந்தர்கள். 30 வருடங்களாக உரிமைக்காக போராடி வரும் அவர்களை ஆதரிப்பதும், காப்பாற்றுவதும் நமது கடமை" என்று கூறினார்.
மேலும், "இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இதனை முதல்வர் கருணாநிதி அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும்.
போரை நிறுத்த முடியாது என்று, ராஜபக்சே இந்திய மண்ணுக்கு வந்து சொல்லும் துணிச்சலை அவருக்கு யார் தந்தது? தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சியைப் பற்றி பயப்படாமல் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
தி.மு.க.வுடன் பா.ம.க.வுக்கு தற்போது கூட்டணி உறவு இல்லை என்றாலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் அவருடைய முடிவுக்கு பின்னால் அணிவகுத்து நிற்போம்.
முதல்வருககு 'மாற்று வழிப்பாதை' என்ற 4 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இருக்கிறோம். உலகமெங்கும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு நமது முதல்வர் ஊக்கம் அளிக்க வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி 'மாற்று வழிப்பாதை' பற்றி தீர்மானம் நிறைவேற்றி, பின்னர் தமிழக சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தை கூட்டி அந்த தீர்மானத்தை சட்டப்பேரவையிலும் நிறைவேற்ற வேண்டும்.
நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழகத்திலும், தலைநகர் டெல்லியிலும் அரசியல் மாநாடுகளை நடத்த வேண்டும். 6 1/2 கோடி தமிழக மக்களின் முதல்வராக இருக்கும் கருணாநிதி இதைச் செய்ய முன்வந்தால் அவருக்கு பின்னால் அணிவகுத்து நிற்க தயார்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.