சென்னை அமபேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த மோதல் குறித்து மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "சட்டக்கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் கொடூர சம்பவம் ஆகும். காவல்துறையினர் இதனை வேடிக்கைப் பார்த்தனர்.
இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்தால் சரியாக இருக்காது. மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) விசாரணை நடத்த வேண்டும். கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும்.
அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கும். காவல்துறை ஆணையர்தான் இதற்கு பொறுப்பு, அவரை இடம் மாற்றம் செய்துள்ளனர். அவரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.