இலங்கையில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி அரசியல் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அதனால்தான் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.இலங்கை அரசின் தமிழ் இனப் படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தலைமையில் இன்று அக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறுகையில், "சிறிலங்க அதிபர் ராஜபக்சே டெல்லியில் போரை நிறுத்த முடியாது என்று கொக்கரித்து இருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை. போர் தீவிரமடையும் என்று தைரியமாக ராஜபக்சே அறிவிக்கிறார். இதற்கு மத்திய அரசுதான் காரணம்" என்று குற்றம்சாற்றினார்.
மேலும், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்றும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டுவது, உணவு பொருட்கள் வழங்குவது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் அனைத்தும் நாடகம் என்றும் வைகோ குறை கூறினார்.
இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசு தான் என்று கூறிய வைகோ, இந்திய அரசு சிறிலங்காவுக்கு ஆயுதங்களை வழங்கி விடுதலைப்புலிகளை அழித்து வருகிறது என்றும் இதன் மூலம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் கவலை தெரிவித்தார்.
மத்திய அரசு போரை நிறுத்த சொன்னால் போர் நிறுத்தப்படும். ஆனால் அதை செய்ய மத்திய அரசு தயங்குவதாக கூறிய அவர், போரை நிறுத்தாவிட்டால் சிறிலங்கா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களை ஒன்று திரட்டி வருகிறோம். தமிழக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது நடக்காது. இந்த போரில் இலங்கை அரசு வெற்றி பெற முடியாது. எல்லா தாக்குதலையும் அவர்கள் எதிர்கொள்ள கூடியவர்கள். எந்த இழப்பையும் ஈடுகட்டி வெற்றி பெறக்கூடியவர்கள் என்று தெரிவித்தார்.
இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி அரசியல் அழுத்தம் கொடுக்காததால்தான் இந்த பிரச்சனை இன்னும் நீடித்து வருகிறது என்றும் வைகோ கூறினார்.
மத்திய அரசு அலுவகங்கள் முன்பு வரும் 25ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் நடத்தும் மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. முழுமையாக இணைந்து போராடும் என்று கூறிய வைகோ ஆயுதம் ஏந்தி போராட சொன்னால் அது ராஜ துரோகமா என்று கேள்வி எழுப்பியதுடன் திரும்ப திரும்ப சொல்கிறேன். அது தவறு இல்லை என்று வைகோ கூறினார்.