சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மேலும் 2 மாணவர்கள் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களிடையே நடந்த மோதலில் 3 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த மோதல் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய 25 தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 26 மாணவர்கள் கைது, சரண் மூலம் காவல்துறையினர் பிடியில் சிக்கி உள்ளனர். மேலும் 4 மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகினறனர்.
இந்த நிலையில், மோதல் தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்ட சத்தியநாராயணன் என்ற மாணவர் இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சென்னை சட்டக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு வடித்து வரும் இவர், மாணவர்கள் மோதல் தொடர்பாக 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இதேபோல், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த கோபி என்ற மாணவர் ஈரோடு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் -1 நீதிமன்றத்தில் நீதிபதி அசோகன் முன்னிலையில் இன்று சரணடைந்தார்.
இவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கோரிக் காலனி என்ற ஊரில் உள்ள அம்பேத்கார் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகன் ஆவார். இவரும் சென்னை சட்ட கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.