சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறிய புகாரை மறுத்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
இது குறித்து சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சுனில் பாலிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு 1998ஆம் ஆண்டு மீட்டர் பொருத்தப்பட்டது. அதிலிருந்து மாதம் 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு ஒவ்வொரு ஆயிரம் லிட்டருக்கும் (ஒரு கிலோ லிட்டர்) ரூ.2.50 வீதம் வசூலிக்கப்பட்டது.
10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் லிட்டர் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.10-ம், 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் லிட்டர் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு ரூ.15-ம், 25 ஆயிரம் லிட்டருக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.25-ம் வசூலிக்கப்பட்டது. கழிவுநீர் அகற்றும் கட்டணமாக, குடிநீர் கட்டணத்தில் 25 சதவீதம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தக் கட்டண முறையை மாற்றி, எல்லா வீடுகளுக்கும் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.15 கட்டணம் நிர்ணயிக்க 2007ஆம் ஆண்டு டிசம்பரில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கட்டணம் அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் கூறியதை அடுத்து, பழைய கட்டண முறையையே பின்பற்றுமாறு 2008ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். எனவே தற்போது முந்தையக் கட்டண முறையே பின்பற்றப்படுகிறது. சென்னை மாநகரில் தற்போது குடிநீர் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை" என்று அவர் கூறினார்.