பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓர் அரங்கத்துக்குள் நடைபெற்ற கட்சி பொதுக் குழுக் கூட்டத்தில் குரு பேசியது தொடர்பாக 6 மாதங்களுக்குப் பின் அவர் மீது, திமுக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியுடன் தோழமையாக இருந்தது வரை நடவடிக்கை எடுக்காமல், உறவில் உரசல் என்றதும், மிகவும் காலம் தாழ்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்ற வாதம் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடியானாலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்.