கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டணத்தைச் சேர்ந்த 17 மீனவர்களை, சர்வதேச கடல் எல்லையை மீறியதாக குற்றம்சாற்றி சிறிலங்க கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜகதாப்பட்டணம் விசைப் படகு உரிமையாளர்கள் நல சங்க தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "நேற்று காலை 7 மணிக்கு ஜகதாப்பட்டணத்தில் இருந்து 5 விசைப் படகுகளில் 17 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். திட்டமிட்டபடி அவர்கள் இன்று காலை 10 மணிக்கு கரை திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் வரவில்லை" என்றார்.
மேலும், ராமேஸ்வரம், பாம்பன் நிரபராதி மீனவர் சங்க தலைவர் அருணாச்சலம் அளித்த தகவல்படி, கடலில் மீன் பிடிக்கச் சென்ற 17 மீனவர்களும் சர்வதேச கடல் எல்லையை தாண்டி வந்தாக குற்றம் சாட்டப்பட்டு சிறிலங்க கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவாக விடுதலை செய்யக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அதிகாரிகளுக்கு சங்கத்தின் மூலம் தந்தி அனுப்பப்பட்டு உள்ளதாகவும் ராமகிருஷ்ணன் கூறினார்.
மீனவர்கள் கைது செய்யப்பட்து குறித்து மீனவளத் துறையை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர்களும் இதனை உறுதி செய்துள்ளனர். மேலும், இது குறித்து தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், மீனவர்களை விரைவாக விடுதலை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
17 மீனவர்கள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடம் பரபரப்பு நிலவுகிறது.