மின்வெட்டை கண்டித்து ஓமலூரில் வரும் 20ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தில், வீரபாண்டி, ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர் மற்றும் எடப்பாடி ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் கடுமையான மின்வெட்டு காரணமாக, அனைத்துப் பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
விசைத்தறித் தொழிலும், வேளாண்மைத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பெரும்பாலான சிறுதொழில்கள் மூடப்படும் அபாய நிலைக்கு வந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறனர்.
இதன் விளைவாக விவசாயத் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதை கண்டித்து 20ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.