சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதலையடுத்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் 15 பேரை இடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 4 மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், உசிலம்பட்டியை சேர்ந்த அரசு , தனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பசும்பொன் தேவர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம், மறியல் செய்தனர்.
கடைகளை அடைக்க சொல்லி வன்முறையை தூண்டியதோடு பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடிகளை உடைத்தனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட இரண்டு பள்ளிகளையும் சேர்ந்த 15 மாணவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருதி வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.
இந்த நிலையில் வன்முறையில் இறங்கியதற்காக காவல்துறையினர் பிடித்து சென்ற மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, அரசு பள்ளியை சேர்ந்த செல்லபாண்டி, பாக்கியபிரபு ஆகிய மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதேபோல், தனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ரஞ்சித், ஜெயபிரகாஷ், மாரிமுத்து, கலைவாணன், மொக்கவீரன், வெங்கடேசன், விக்னேஷ், இந்தியன், கிருஷ்ணன், முத்துப் பாண்டி, வினோத்குமார், அகிலன் ஆகிய மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.