சென்னையில் 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மாவட்டத்தை சேர்ந்த 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு இன்று முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை சுருக்க முறை திருத்தம் நடைபெறுகிறது. 1.1.2009 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், புதியதாக குடிபெயர்ந்து வந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அனைத்து வாக்குசாவடி மையங்கள், மண்டல அலுவலங்கள் மற்றும் தபால் நிலையங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இதனை பார்வையிட்டு, தாம் வசிக்கும் தற்போதைய முகவரில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றாலும், பெயர் இருந்து அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாலும் பெயரை நீக்க வேண்டும் என்றாலும், படிவங்களை பூர்த்தி செய்து பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம் ஓட்டி உரிய கையொப்பம் இட்டு அந்தந்த மையங்களிலோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலங்களிலோ கொடுக்கலாம்.
படிவம் 6, 1.1.2009 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள். படிவம் 7, பெயரை நீக்கம் செய்ய, படிவம் 8, பெயர் மற்றும் புகைப்படம் திருத்தம் செய்ய, படிவம் 8 ஏ, ஒரே தொகுதிக்குள் இடம் மாறியவர்கள்.
படிவம் 6, 8, 8 ஏ, ஆகியவற்றுடன் படிவம் 001 ஏ, நிரப்பி புகைப்படங்களுடன் இணைக்கப்பட வேண்டும். படிவங்கள் அனைத்தும் சரியாக நிரப்பப்பட்டு உரிய கையொப்பம் இடவேண்டும். படிவம் 6 மற்றும் 8 ஏ-யில் முந்தயை முகவரி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். படிவங்களுடன் தற்போது வசிக்கும் முகவரிக்கான இரண்டு சான்றுகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்படாவிட்டாலோ அல்லது மனுதாரரின் கையொப்பம் இல்லாவிட்டாலோ மனு நிராகரிக்கப்படும். படிவங்களை சம்பந்தப்பட்ட மனுதாரர் அல்லது அவரது குடும்ப நபர் மட்டுமே மையங்களில் ஒப்படைக்க வேண்டும். மனுதாரர் அல்லாத மற்றையோர் மூலம் மனு சமர்ப்பிக்க கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.