இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் டிசம்பர் 8ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அரவாணிகள் கூட்டமைப்பின் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், திரையுலகினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம், மனிதசங்கிலி உள்பட பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரவாணிகள் கூட்டமைப்பு சார்பில் கல்கி, பிரியாபாபு ஆகிய திருநங்கைகள் காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்து, உளவுத் துறை கூடுதல் துணை ஆணையர் இளங்கோவை சந்தித்து, டிசம்பர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், "இலங்கை பிரச்சனையில் மற்றவர்கள் போராடுவதைவிட நாங்கள் போராடினால், அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும். இது தொடர்பாக பல்வேறு தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். இதன் பிறகாவது இலங்கையில் போர் நிறுத்தம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தனர்.