மேட்டூர் அனல் மின்நிலைய பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அப்பணிகளை மேற்கொள்ள உள்ள பி.ஜி.ஆர். எனர்ஜி சிஸ்டம்ஸ் மற்றும் சீனாவின் டாங்பேங் நிறுவனத்தை மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஜுன் மாதம் 25ஆம் தேதி 600 மெகாவாட் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கான ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர். எனர்ஜி சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.3,100 கோடிக்கு வழங்கியது. இதன்படி மேட்டூர் அனல்மின் நிலையத்தின் கட்டுமானம் செப்டம்பர் 2011இல் முடிந்து செயல்படத் தொடங்க வேண்டும்.
இதற்கான கொதிகலன் மற்றும் மின் உற்பத்தி இயந்திரங்கள் சீனாவின் டாங்பேங் எலக்ட்ரிக் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. டாங்பேங் சீனாவின் மத்திய அரசின் நிறுவனம். இது சீனாவின் மிகப்பெரிய கொதிகலன் மற்றும் மின் உற்பத்தி இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். இதன் வருடாந்திர உற்பத்தி அளவு 33 ஆயிரம் மெகாவாட்.
இந்நிறுவனத்தின் தலைவர் ஸீ ஸெவு தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று திட்டத்திற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள சென்னை வந்தது. இக்குழு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்தது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மச்சேந்திரநாதன் மற்றும் எரிசக்தித்துறை செயலர் ஸ்மிதா நாகராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அந்த சந்திப்பின் போது, மின்துறை அமைச்சர் மேட்டூர் அனல்மின் நிலையப் பணிகளை ஜனவரி 2011-க்குள் முடிக்கும்படி பி.ஜி.ஆர். எனர்ஜி சிஸ்டம்ஸ் மற்றும் சீனாவின் டாங்பேங் நிறுவனத்தையும் கேட்டுக் கொண்டார். ஸீ ஸெவு தங்களால் முயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு குறித்த காலத்தில் முடிக்க முயற்சிப்பதாக உறுதி கூறினார். மேலும், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற அந்த இரு நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழக அரசின் முழு ஒத்துழைப்பையும் தர அமைச்சர் உறுதி அளித்தார்" என்று கூறப்பட்டுள்ளது.