முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக தமிழக அரசும், கேரள அரசும் தாக்கல் செய்த அறிக்கையின் மீதான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது!
தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்கும் பிறகும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாத கேரள அரசு, தனது மாநிலத்திலுள்ள அணைகள் மற்றும் பாசனப் பகுதிகள் பாதுகாப்புத் தொடர்பான பராமரிப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்து அதனை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் தட்டிக்கழித்து வருகிறது.
கேரள அரசு நிறைவேற்றிய திருத்தம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசீனப்படுத்துவதாகும் என்று கூறி தமிழக அரசு உடனடி விசாரணை மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பை மத்திய நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, மத்திய நீர்வளத்துறை நிபுணர் குழு அணையை ஆய்வு செய்து அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
இதேபோல், ஐ.ஐ.டி. முன்னாள் பேராரிசியர்கள் குழு அளித்த அறிக்கையை கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கைகளை சரிபார்க்கவும், இரு தரப்பு சாட்சிகளை விசாரித்து பதிவு செய்யவும் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது உச்ச நீதிமன்றம். அந்தக் குழு அறிக்கையை சரிபார்த்து கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில், இரு மாநில அரசுகளின் அறிக்கை மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பசாயத், டி.கே. ஜெயின், முகுந்த் சர்மா ஆகியோர் அடங்கிய நீதிமன்றக் குழு, அடுத்த ஆண்டு (2009) ஜனவரி மாதம் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் தொடர்ந்து 3 நாட்கள் வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.
கேரள அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜி. பிரகாஷ், 3 நாள் விசாரணை போதாது என்றும், கூடுதல் நாட்கள் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் குழு, வழக்கு விசாரணையை 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.