சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதல் குறித்து பணியில் உள்ள நீதிபதிகள் குழுவைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டக்கல்லூரியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சென்னை எழும்பூரில் காவல்துறை ஆணையரை சந்தித்து விட்டு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்ட கல்லூரி பிரச்சனையில் ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளாமல், தொடர்புடைய மாணவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
இந்த பிரச்சனை குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரித்த நீதிபதியாவார். அவருக்குப் பதிலாக தற்போது பணியில் உள்ள நீதிபதிகள் குழுவை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறினார்.
மாணவர் கலவரம் தொடர்பான காட்சிகளை மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது சரியல்ல என்று கூறிய அவர், அப்படி செய்வதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுவதாகவும் திருமாவளவன் குற்றம்சாற்றினார்.