மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து மர்ம கும்பலைச் சேர்ந்த சிலர் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மாதரை மற்றும் வத்தலக்குண்டு சாலை, செக்கானூரணி, உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் நேற்றிரவு சென்ற அரசு பேருந்துகள் மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 4 பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன.
தொடரும் வன்முறையால் உசிலம்பட்டியில் இருந்து பிற கிராமங்களுக்கு இரவு நேர பேருந்துகள் இயக்கப்படாததால் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
அரசு பேருந்துகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் வன்முறை நிகழ்வுகளால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் உசிலம்பட்டியில் முகாமிட்டு ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதேபோல், சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மீதும் நேற்றிரவு மர்மகும்பலைச் சேர்ந்த சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் 3 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.